Pages

Saturday 8 September 2012

யானை


போலந்துச்  சிறுகதை
ஸ்லவோமிர் ம்ரோசெக்
தமிழில்: மனசு

 [எனது பாடசாலைக் காலத்தில் "பாலம்" எனும் சஞ்சிகையில் இதன் மொழி பெயர்ப்பை நான் முதன் முதலில் வாசித்தேன். அந்த நாட்களில் வெறுமனே ஒரு 'கதை' என்ற எல்லைக்குள்ளேயே இக் கதையை நான் புரிந்து வைத்திருந்தேன். எனினும்,பின்னாளில் என் அனுபவப் பரப்பு விரிவடைய விரிவடைய இக் கதையின் விரிபடு அர்த்தங்களை நான் புரிந்து கொண்டேன். தனி நபர்கள், சமூகம், சமூக நிறுவனங்கள், அரசு எனப் பல்வேறு தளங்களில் சொல்லப் படும் கொள்கைகளுக்கும் யதார்த்த நடைமுறைகளுக்குமிடையில் இருக்கும் இடைவெளிகளும் அதனால் ஏற்படும் ஆபத்தான சமூக விழைவுகளையும் மிக இலாவகமாக இக் கதை வெளிக்கொணர்கிறது. சொல்லப் படும் கொள்கைகளுக்கும், நடைமுறைப் படுத்தப் படுபவைக்கும் (Espoused Theories  Vs Theories  in  Use ) இடையிலான இடை வெளி எவ்வாறு சமூகத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், அமைதி என்பவற்றை மெல்ல மெல்ல அரித்து விடுகிறது என்பதனை ஒவ்வொரு நாளும் கண்கூடாகத் தரிசிக்கும் எமக்கு இக் கதை மிகவும் நெருக்கமானது. கதையின் மொழி பெயர்ப்பைப் 'பாலம்' சஞ்சிகையிலிருந்து அப்படியே தருகிறேன்.]

அந்த மிருகக் காட்சிச் சாலையின் டைரக்டர் ஒரு அற்பமான ஆசாமி. மிருகங்களைத் தன் முன்னேற்றத்திற்கான வெறும் கருவிகளாக நினைப்பவர். கல்வி சம்பந்தமாக அது முக்கியமான இடமாயிற்றே என்பதெல்லாம் அவருக்குப் பெரிசில்லை.

அங்குள்ள ஒட்டகச் சிவிங்கிக்குக் கழுத்து குட்டையாக இருக்கும். நீர் நாய்க்கு வளை கிடையாது. மைனாக்கள் எப்போதாவது சுரத்தில்லாமல் ஏனோ தானோவென்று சீட்டியடிக்கும். பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி பார்க்க வருகிற இடத்தில் இப்படிப்பட்ட குறைகள் இருக்க விடலாமா?

மிருகக் காட்சிச் சாலை மாநிலத் தலை நகரிலிருந்தது. அங்கே ரொம்ப முக்கியமான சில மிருகங்களுக்குப் பஞ்சம். அதில் யானையும் ஒன்று. ஆயிரம் முயலிருந்து என்ன செய்ய?கம்பீரமான ஒரு யானைக்கு நிகராகுமா? எப்படியோ, சரியாகத் திட்டமிடப்பட்ட முறையில் குறைகள் தீர்க்கப் பட்டுத் தான் வந்தன. நாடு முன்னேறி விட்டதில்லையா?

ஜூலை 22 . நாட்டுக்கு விடுதலை கிடைத்த நாள். அந்தக் கொண்டாட்டத்தையொட்டி மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு யானை ஒதுக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வந்தது. கருமமே கண்ணாக இருக்கும் ஊழியர்களுக்கு இந்தச் செய்தி கேட்டு ஆனந்தம். ஆனால் அந்த யானைக்குப் பதிலாக ரொம்பவும் சிக்கனமான முறையில் வேறு யானை வாங்குவதற்குத் திட்டம் தீட்டி வார்சவுக்குக் கடிதம் எழுதிவிட்டார் டைரக்டர். இந்த விஷயம் அவர்களுக்குத் தெரிய வந்த போது இன்னும் பெரிய ஆச்சரியம். புதுத் திட்டம் இது தான்.

"யானையை முன்னிட்டுப் போலந்துச் சுரங்கத் தொழிலாளர்களுக்கும், உலோக ஆலைத் தொழிலாளர்களுக்கும் எவ்வளவு பெரிய சுமை என்பதை நானும் ஊழியர்களும் நன்கறிவோம். நமது செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு இதோ ஒரு யோசனை. தங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட யானைக்குப் பதிலாக நாங்களே ஒன்றை வாங்கிக் கொள்கிறோம். அதே அளவுக்கு ரப்பரில் யானை செய்து காற்றடித்து கிராதிக்குப் பின்னால் வைத்து விடலாம். அதே நிறத்தில் ஜாக்கிரதையாகப் பெயின்ட் அடித்து விடலாம். கிட்டத்திலிருந்து பார்த்தால்கூட நிஜ யானைக்கும் அதற்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. யானை மந்தமான மிருகம் என்பதும், ஓடியாடிக் குதிக்காது என்பதும் தெரிந்ததே. அதிலும் இந்த யானை படு மந்தம் என்று நோட்டீஸ் போர்டு எழுதி கிராதியில் மாட்டி விடலாம். இந்த வழியில் மிச்சமாகும் பணத்தை ஜெட் விமானம் வாங்கவோ தேவாலய நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்கவோ பயன்படுத்தலாம்.

இந்த யோசனையும் செயலும் பொதுப் பணிக்கும் போராட்டத்துக்கும் எனது எளிய காணிக்கையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு
“ ………………… "

இந்தக் கடிதம் ஒரு ஆத்மா இல்லாத அதிகாரி கையில் கிடைத்திருக்க வேணும். முழுக்கவும் அதிகாரத் தோரணையில் கடமையைச் செய்கின்ற அவர் இந்த விஷயத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் பரிசீலிக்கவில்லை. செலவைக் குறைக்கவேண்டுமென்று உத்தரவு இருந்தது. அதன்படி நடந்தார். டைரக்டர் அனுப்பிய திட்டத்தை ஏற்றுக் கொண்டார். மந்திரி சபை ஒப்புதலும் கிடைத்து விட்டது. ரப்பர் யானை செய்ய டைரக்டர் தடபுடல் படுத்தினார்.

இரண்டு யானைப் பாகர்கள் ஆளுக்கொரு புறமிருந்து ரப்பர் யானையின் உடம்பில் காற்று ஊதிப் புடைக்க வைக்க வேண்டியிருந்தது. இந்தக் காரியம் கமுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராத்திரியிலேயே செய்து முடிக்க வேண்டிய நிலைமை. ஏனென்றால் மிருகக்காட்சிச் சாலைக்கு யானை வரும் செய்தி கேட்டு நகரத்து ஜனங்கள் அதைப் பார்க்க ஆவலாக இருந்தார்கள். டைரக்டர் நடவடிக்கைகளைத் துரிதப் படுத்தினார். அவருடைய யோசனையை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் போனஸ் கிடைக்குமே.

யானைப் பாகர்கள் இருவரும் ஒரு கொட்டகையைப் பூட்டிக் கொண்டு ஊதா ஆரம்பித்தார்கள். அந்தக் கொட்டகையில் பொதுவாகப் பட்டறை இருக்கும். முக்கி முக்கி இரண்டு மணி நேரம் ஊதியும் ரப்பர் தோல் தரையிலிருந்து இரண்டு அங்குலம் தான் எழும்பி இருந்தது. அந்த ஊத்தலும் கொஞ்சங்கூட யானைச் சாயலுக்கு இல்லை.

ராத்திரி நேரம் கரைந்து கொண்டிருந்தது. வெளியே மனுஷ சத்தங்கள் ஓய்ந்து விட்டன. ஆண் கழுதையின் கனைப்பு மட்டுமே இருட்டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. களைத்துப் போன யானைப் பாகர்கள் ஊதுவதை நிறுத்திவிட்டு உள்ள காற்றும் வெளியேறுகிறதா என்று பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் இளைஞர்கள் இல்லை. இந்த மாதிரி வேலை செய்து பழக்கம் கிடையாது.

ஒருவன் சொன்னான்: "நம்ம இந்தக் கதியில போன விடியிறதுக்குள்ள முடிச்சுக்கிற மாட்டோம். என் வீடுக்காரியிட்ட என்ன சொல்லட்டும். ராத்திரி முழுக்க யானைத் தோல் ஊதிக்கிட்டிருந்தேன்னு சொன்ன நம்பவே மாட்டா".

மற்றவன் ஆமோதித்தான். "அது சரிதான். தெனமும் ஊதிக் கிட்டிருக்கிறது தானா வேலை. எல்லாம் நாம் டைரக்டர் ஆல வந்த வென. ஐயா இடதுசாரியாச்சே."

மறுபடியும் ஊதத் தொடங்கினார்கள். அரை மணிக்கு மேல்விடாமல் ஊத முடியவில்லை. ரப்பர் ஊத்தமும் முந்திக்கு இப்போது பெரிசாகி இருந்தது. ஆனால் யானைச் சாயல் தான் இல்லை.

முதல்பாகன் சொன்னான்." போகப்போக ரொம்பக் கஷ்டமாயிருக்கே" இரண்டாம் பாகன் மறுக்கவில்லை. "ரோதனையான வேலையாப் போச்சு. சரி சரி, கொஞ்ச நேரம் தவிப்பாறிக்கிருவோம்.

அவர்கள் தவிப்பாறும் போது காற்றடிக்கும் குழாயொன்று ஒருவன் கண்ணில் பட்டது. குழாயின் நுனியில் ஒரு வால்வு இருந்தது. அடடா, யானைக்குள் காற்றடித்து விடலாமே. மற்றவனிடம் இந்த யோசனையைச் சொன்னான்.

அந்தப்படியே முயற்சி செய்வதென்று முடிவுக்கு வந்தார்கள். யானையை குழாயில் பொருத்தி வாழ்வைத் திருகினார்கள். கொஞ்ச நேரந்தான், கொட்டகைக்குள் முழு உருவத்தில் ஒரு மிருகம் நின்றது. அவர்களுக்கேன்றால் சந்தோசம். நிஜ யானையே தான். பெருத்த உடம்பு. தூணைப் போலக் கால்கள். சுளகுக் காதுகள். நீண்டு தொங்கும் துதிக்கை. பேராசை பிடித்தாடிய டைரக்டர் இற்குத் தெம்பு வந்தது. அடேங்கப்பா. மிருகக் காட்சிச் சாலையில் நிஜமாகவே ரொம்பப் பெரிய யானை நிற்கப் போகிறது.

காற்றடிக்கும் யோசனை சொன்ன பாகன் துள்ளினான். "அருமையாயிருக்கு. இனிமே நம்ம வீட்டுக்குப் போகலாம்"

காலையில் யானை விசேஷமாக மிருகக் காட்சிச் சாலைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. குரங்குக் கூண்டுக்கு அடுத்து மையமான இடத்தில் நிறுத்தினார்கள். பெரிய நிஜமான பாறைக்கு முன்னால் நின்ற யானை பயங்கரமாகவும் அற்புதமாகவும் தோற்றமளித்தது. கிராதியில் பெரிய நோட்டீஸ் போர்டு.

"இது குறிப்பாக மந்தமானது. அரிதாகவே அசையும்"

அன்றைக்குக் காலையில் முதலாவது வந்த பார்வையாளர்களில் உள்ளூர் பள்ளிக் குழந்தைகளின் குழுவும் ஒன்று. அவர்களைக் கூட்டி வந்திருந்த வாத்தியார் யானையைப் பற்றி நேருக்கு நேரான பாடம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். யானைக்கு முன்னால் அவர்களை நிறுத்திப் பாடத்தை ஆரம்பித்தார்.

"யானை சாகபட்சணியான பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. துதிக்கையால் மரக் கன்றுகளைப் பிடுங்கி இலைகளைத் தின்னும்"

குழந்தைகள் ஆர்வம் கொப்பளிக்க யானையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது மரக் கன்றைப் பிடுங்குவதை பார்க்க வேண்டுமென்று காத்திருந்தார்கள். ஆனால் அந்த மிருகம் கிராதிக்குப் பின்னால் இன்னும் சும்மா நின்று கொண்டிருந்தது.

"யானையானது பண்டைய காலத்தில் உயிர் வாழ்ந்து அழிந்து போன ராட்சத யானையின் நேரடி வம்சமாகும். ஆகவே இதுவே நிலத்தில் வாழும் மிகப் பெரிய மிருகம் என்பதில் ஆச்சரியமில்லை."

மாணவர்கள் ரொம்ப அக்கறையாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

"திமிங்கிலம் ஒன்று தான் யானையைவிட அதிக எடையுள்ளது. ஆனால் அது கடலில் வாழ்கிறது. அதனால் நிலத்தில் யானைதான் ராஜா என்று அடித்துச் சொல்லலாம்."

மிருகக் காட்சிச் சாலையின் மரக் கிளைகள் காற்றுக்கு அசைந்தன.

"முழு வளர்ச்சியடைந்த ஒரு யானையின் எடை ஒன்பதாயிரம் முதல் பதின்மூன்றாயிரம் ராத்தல்களாகும்".

அந்தக் கணத்தில் யானை காற்றுக்கு நடுங்கி மேலே எழும்பியது. சில வினாடிகள் தரைக்குச் சற்று உயரத்தில் ஊஞ்சலாடியது. ஆனால் திடீரென வந்த காற்று அதன் பருத்த நிழலுருவம் ஆகாயத்திற்கெதிராக திரும்பும் வகையில் மேல் வாக்கில் தள்ளியது. அதன் பாத வட்டங்களையும் பானை வயிற்றையும் துதிக்கையையும் தரையிலிருந்த ஜனங்களால் கொஞ்ச நேரம் பார்க்க முடிந்தது. சீக்கிரத்திலேயே காற்றின் உந்துதலால் வேலிக்கு மேலே மிதந்து மர உச்சிகளுக்கப்பால் மறைந்து விட்டது. கூண்டுகளுக்குள்ளிருந்த குரங்குகள் பிரமித்துப் போய் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

அடுத்துள்ள தாவரவியல் பூங்காவில் யானை விழுந்து கிடந்தது. கள்ளிச்செடியில் இறங்கியதால் ரப்பர் தோலில் முள் குத்திப் பழுதடைந்து விட்டது.

மிருகக் காட்சிச்சாலையில் நடந்ததைப் பார்த்த குழந்தைகள் விரைவிலேயே படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு ரௌடிகளாக மாறி விட்டனர். அவர்கள் சாராயம் குடித்து விட்டு ஜன்னல்களை உடைத்துக் கொண்டு திரிவதாகத் தகவல்.

அவர்களுக்கு யானை மேல் நம்பிக்கையற்றுப் போயிற்று.

Sunday 26 August 2012

About


மௌனமாக இருப்பதைச் சாத்தியமற்றதாக்குகின்றன சம்பவங்களும்,  சூழ்நிலைகளும், அவற்றால் சூழப்பட்ட எமது இருப்பும்.

குரல் எழுப்புவதால் பயனேதும் இருக்குமா? என்ற ஐயம் விளைவித்த மௌன வெளியில், அதர்மம் இராஜ பேரிகை முழங்கிச் செல்கிறது ஊர்வலமாக...

அதன் பேரிரைச்சல் நியாயமாக வாழ்தல் காலப்பொருத்தமற்றதோ? என்ற இன்னுமொரு  ஐயத்தை எழுப்புகிறது, மௌனித்தவர்களின் ஆன்மாக்களில்.

அரசும் அதன் இயந்திரங்களும் மட்டுமல்ல, எமது சமூகமும், சமூக நிறுவனங்களும், சமூக மாந்தரின் தனி நபர் நடத்தைகளும், அற நியமங்களைத் தொலைத்து விட்டு அந்தப் பேரிரைச்சலுடன் செல்லும் ஊர்வலத்தில் அள்ளுண்டு செல்கின்றன, அதன் கோஷங்களை உதடுகளில் ஏந்தியபடி.

இந்தப் பேரிரைச்சலை வலிதற்றதாக்க வேண்டுமெனின், முதலில் எம் மௌனப் பெரு வெளியை  நிறைக்க வேண்டும்... நியாயங்களின் உரத்த குரல்களால்.

மௌனமாக இருப்பது  அமைதியைத் தருவதற்குப் பதிலாக ஆன்மாவை அரிப்பதாக உணர்வதனால் மௌனம் கலைகிறோம் உணர்வொத்த சிலர்.

நியாயத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதற்காக......

மூடப் பட்ட உதடுகளையும், பேனாக்களையும் திறப்பதெனப் பிரதிக்ஞை செய்கிறோம், நிரந்தரமாக மௌனமாக்கப் பட்டவர்களின் நினைவாக...